பதுளை மாவட்ட மக்களுக்கு வழங்கப்படும் நோயாளி பராமரிப்பு சேவைகளை மேலும் வினைத்திறனுள்ளதாகவும் தரமுள்ளதாகவும் உயர்த்தும் நோக்கில், மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளுக்குப் புதிய ஆம்புலன்ஸ் வண்டிகளை விநியோகிக்கும் நிகழ்வு அண்மையில் பதுளை பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதற்காக மொத்தம் 181.5 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இதில் 5 ஆம்புலன்ஸ் வண்டிகளுக்காக 123.9 மில்லியன் ரூபாயும், அவற்றுக்குத் தேவையான அதிநவீன மருத்துவ உபகரணங்களுக்காக 57.6 மில்லியன் ரூபாயும் செலவிடப்பட்டுள்ளன. இப்புதிய ஆம்புலன்ஸ் வண்டிகள் தியத்தலாவை, வெலிமடை, பண்டாரவளை ஆகிய ஆதார வைத்தியசாலைகளுக்கும், கொஸ்லந்த மற்றும் லுணுகலை ஆகிய பிரதேச வைத்தியசாலைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன, ஊவா மாகாண ஆளுநர் கபில ஜயசேகர, இளைஞர் விவகார பிரதி அமைச்சர் தினிந்து சமன் ஹென்னாயக்க மற்றும் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திர பண்டார உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.