ரூ. 2,500 மில்லியன் மதிப்பிலான வருமான ஈட்டும் திட்டங்கள் நாடு தழுவிய ரீதியில் தொடக்கம்
15 ஆகஸ்ட், 2026 அன்று 11:06 PM
2026 ஆம் ஆண்டில் நாடு தழுவிய உள்ளூராட்சி மன்ற மட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ள ரூ. 2,500 மில்லியன் மதிப்பிலான திட்டங்கள் இன்று தொடங்கி வைக்கப்பட்டன.

உள்ளூராட்சி மன்ற மட்டத்தில் 2,500 மில்லியன் ரூபாய் மதிப்பிலான 100-க்கும் மேற்பட்ட வருமான ஈட்டும் திட்டங்களின் பிரதான தொடக்க விழாக்கள் இன்று (14) முற்பகல் 9.30 மணிக்கு நடைபெற்றன. ஒரு பிரதான விழா பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தலைமையில் புத்தளம் மதுரங்குளியிலும், மற்றொன்று பிரதி அமைச்சர் ருவன் செனரத் தலைமையில் ஹம்பாந்தோட்டை அங்குணகொலபெலஸ்ஸவிலும் நடைபெற்றது.
"புனருதயே புரவர" (மறுமலர்ச்சி நகரம்) தேசிய திட்டத்தின்கீழ் இத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. உள்ளூராட்சி மன்றங்கள் மத்திய அரசின் நிதியை மட்டும் நம்பியிருக்காமல், பொருளாதார ரீதியாக சுதந்திரமான அமைப்புகளாக மாறுவதே இதன் நோக்கமாகும். இதற்காக, நடப்பு பட்ஜெட்டில் பொது நிர்வாகம் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஊடாக 2,500 மில்லியன் ரூபாய் மூலதன மானியமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
கிராமப்புற சமூகத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதோடு, உள்ளூராட்சி மன்றங்களின் வருமான வழிகளை மேம்படுத்தி, மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாக அமைந்துள்ளன.