மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கண்டியனாறு குளத்தை அபிவிருத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் வகையில் அண்மையில் (08) கள விஜயம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவர் கந்தசாமி பிரபு தலைமையில் நடைபெற்ற இந்த விஜயத்தில், மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர். விவசாய அமைப்புகள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு இணங்க, இக்குளத்தை அபிவிருத்தி செய்வதற்கான வழிகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. கண்டியனாறு குளம் புனரமைக்கப்பட்டால், 600 ஏக்கருக்கும் அதிகமான வயல் நிலங்களில் இருபோக விவசாய நடவடிக்கைகளை தடையின்றி மேற்கொள்ள முடியும் என சுட்டிக்காட்டப்பட்டது. இது அப்பகுதி விவசாயிகளின் உற்பத்தியை அதிகரித்து, வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவும். இந்த விஜயத்தில் மண்முனை மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் கோபாலப்பிள்ளை, பிரதேச செயலாளர் நமசிவாயம் சத்தியானந்தி, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் வி. நவநிதன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ரீ. நிர்மலராஜ் மற்றும் அரச அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.