மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களமும், மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த இளைஞர், யுவதிகளுக்கான மாபெரும் தொழிற்சந்தையானது இன்று (14) நடைபெற்றது. பிரதேச செயலாளர் திரு உ. உதயஸ்ரீதர் அவர்களின் தலைமையில், பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இந்நிகழ்வு சிறப்பாக நடத்தப்பட்டது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பிரபல தனியார் நிறுவனங்கள் மற்றும் கல்வி வழங்கும் நிறுவனங்கள் பங்கெடுத்தன. அவர்கள் தங்கள் நிறுவனங்களில் உள்ள வேலைவாய்ப்புகள் மற்றும் தொழிற்பயிற்சி நெறிகள் தொடர்பான தெளிவுபடுத்தல்களை இளைஞர்களுக்கு நேரடியாக வழங்கினர். இச்சந்தையில் வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்கல்வி வழிகாட்டல்களைப் பெறுவதற்காக சுமார் 200-க்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். அத்துடன், ஏற்கனவே குறிப்பிட்ட துறைகளில் தொழில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு RPL முறைமை மூலமாக NVQ தர சான்றிதழ் பெற்றுக்கொள்வதற்கான வழிகாட்டல்களும் வாய்ப்புகளும் இங்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன.