மட்டக்களப்பு திராய்மடு பகுதியில் தீவிர டெங்கு ஒழிப்பு நடவடிக்கை
15 ஆகஸ்ட், 2026 அன்று 11:01 PM
மட்டக்களப்பு திராய்மடு பகுதியில் டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டதை அடுத்து, அங்கு தீவிர டெங்கு ஒழிப்பு மற்றும் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

நாடளாவிய ரீதியில் தேசிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மட்டக்களப்பு திராய்மடு பகுதியில் டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, அங்கு விசேட டெங்கு ஒழிப்பு மற்றும் பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, பொதுச் சுகாதாரப் பரிசோதகர் த.மணிமாறன் தலைமையிலான குழுவினர் இந்த ஒழிப்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர். இதில் மாவட்ட செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்களும் இணைந்து திராய்மடு பகுதியில் தீவிர சோதனைகளை நடத்தினர்.
இந்த சோதனையின்போது, டெங்கு கொசுக்கள் பெருகுவதற்கு ஏதுவான சூழலை ஏற்படுத்தியிருந்த இடங்களும், டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறியப்பட்ட வீடுகளும் கண்டறியப்பட்டன. அவ்வாறு அலட்சியமாக இடங்களை பராமரித்த வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.