இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ய. அநிருத்தனன் வழிகாட்டலில், திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன் தலைமையில் “நேர்மையின் கலாசாரம் – தூய்மையான இலங்கை” என்ற தொனிப்பொருளிலான தேசிய நேர்மை வார நிகழ்வு நேற்று (09) நடைபெற்றது. மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். இதன் ஒரு பகுதியாக, மூன்றாம் கட்டை சோழையடி பைரவர் கோயிலிலிருந்து நாகம்மாள் அறநெறி பாடசாலை வரை விழிப்புணர்வு நடைபயணம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதில் அறநெறிப் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர். மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே நேர்மை, ஒழுக்கம் மற்றும் நல்லொழுக்க விழுமியங்களை வளர்க்கும் நோக்கில் இந்நிகழ்வு அமைந்தது. நடைபயணத்தைத் தொடர்ந்து மாணவர்களின் கலை, கலாசார நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டதுடன், நேர்மையான சமூகத்தை உருவாக்குவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.