திருகோணமலை: புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு 10 இயந்திரப் படகுகள் உதவி
15 ஆகஸ்ட், 2026 அன்று 11:01 PM
தித்வா புயலால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மாவட்ட மீனவர்களுக்கு, அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் நேற்று 10 இயந்திர மீன்பிடிப் படகுகள் வழங்கப்பட்டன.

தித்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த திருகோணமலை மாவட்ட மீனவர்களுக்கு, 10 இயந்திர மீன்பிடிப் படகுகள் வழங்கும் நிகழ்வு நேற்று (13) திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. புயல் அனர்த்தத்தினால் மீன்பிடி உபகரணங்களை இழந்து தவித்த மீனவர்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில் இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது.
மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீம ஆகியோர் கலந்துகொண்டு பயனாளிகளுக்குப் படகுகளை உத்தியோகபூர்வமாக வழங்கினர்.
இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர், பணிப்பாளர் நாயகம், திருகோணமலை மாவட்ட மீன்பிடித் துறைமுக அதிகாரிகள் மற்றும் மாவட்ட மீன்பிடிச் சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.