வாழைச்சேனையில் 'அத்தம' தூய்மைப்பணித் திட்டம்: பொதுமக்கள், அதிகாரிகள் பங்கேற்பு!
15 ஆகஸ்ட், 2026 அன்று 11:01 PM
கிளீன் சிறிலங்கா திட்டத்தின் கீழ், வாழைச்சேனை தியாவட்டவானில் சுற்றுச்சூழல் தூய்மை மற்றும் சமூக ஒற்றுமையை வலியுறுத்தி 'அத்தம' வேலைத்திட்டம் நடைபெற்றது.

கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் "ஒற்றுமையாக ஒன்றிணைவோம்; கிளீன் சிறிலங்காவைக் கட்டியெழுப்புவோம்" என்ற தொனிப்பொருளிலான 'அத்தம' நிகழ்ச்சித் திட்டம் கடந்த சனிக்கிழமை (08) நடைபெற்றது. கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தியாவட்டவான் கிராம சேவகர் பிரிவில் இதற்கான பிரதான நிகழ்வு இடம்பெற்றது.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாறக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் எம்.எம். ஹலால்தீன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.எம்.ஸாஹித், நாவலடி இராணுவ முகாம் கெப்டன் சமீர ராஜபக்ச மற்றும் இராணுவத்தினர் பங்கேற்றனர்.
மேலும், தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட நிறைவேற்றுக் குழு உறுப்பினர் எம்.ஏ.சீ.எம். நியாஸ்தீன் ஹாஜி, தியாவட்டவான் பிரஜா சக்தி தலைவர் எம்.பி. பௌர்தீன், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு தங்களது பங்களிப்பை வழங்கினர். இத்திட்டம் ஏனைய கிராம சேவகர் பிரிவுகளிலும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.