வடக்கு மாகாணத்தின் ஏற்றுமதி மற்றும் சரக்கு போக்குவரத்துத் துறையை வலுப்படுத்தும் நோக்குடன், 'ஸ்மார்ட் மரைன் லங்கா' (Smart Marine Lanka) நிறுவனத்தின் புதிய கிளை அலுவலகம் யாழ்ப்பாணத்தில் திறக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - கண்டி வீதியில் உள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை கட்டடத்தின் முதலாவது மாடியில், நேற்று (10.08.2026) திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் முதன்மை விருந்தினராகவும், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்றனர். வடக்கு ஏற்றுமதியாளர் சம்மேளனத்தின் ஒத்துழைப்புடன் தொடங்கப்பட்டுள்ள இக்கிளை, இப்பகுதியின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தேவைகளை எளிதாக்க உதவும். இக்கிளையின் மூலம் கப்பல் முகவர் சேவைகள், கடல் மற்றும் வான்வழி சரக்கு போக்குவரத்து, கொள்கலன் குத்தகை, சுங்கத் தரகு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்படவுள்ளன. இலங்கை, இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுடனான நிறுவனத்தின் சர்வதேச வலையமைப்பின் மூலம் வடக்கின் வர்த்தகத் தொடர்புகள் மேலும் விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.