கொழும்பில் கடந்த ஜூலை 24ஆம் தேதி தொடங்கிய "கொழும்பு இலக்கிய விழா"வில் (Colombo Literary Festival) பங்கேற்று உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியோடு கல்வி, படைப்பாற்றல், கலாசாரம் மற்றும் கலைத்துறை சார்ந்த முதலீடுகள் ஆழமாக பிணைக்கப்பட்டுள்ளன என்றும், அவை தேசத்தின் இன்றியமையாத பகுதியாகும் என்றும் குறிப்பிட்டார். ஜூலை 24 முதல் 29 வரை ஆறு நாட்களுக்கு நடைபெறும் இந்த இலக்கிய விழாவானது, உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியிலான எழுத்தாளர்கள், கவிஞர்கள், திறனாய்வாளர்கள், கல்வியாளர்கள், திரைப்படத் தயாரிப்பாளர்கள், கலைஞர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்களை ஒன்றிணைக்கிறது. கலை மற்றும் இலக்கியங்கள் குறித்து விவாதிக்கவும், கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் ஒரு சிறந்த தளமாக இது திகழ்கிறது. விழாவில் தொடர்ந்து பேசிய பிரதமர், நாட்டின் வரலாற்றில் நிகழ்ந்த சில மோசமான சம்பவங்களை நினைவுபடுத்தும் மாதமாக ஜூலை மாதம் விளங்குவதாகக் கூறினார். பல தசாப்த கால மோதல்கள், பேரழிவுகள் மற்றும் புத்தகங்கள் எரிக்கப்பட்ட கொடூரங்கள் இதில் அடங்கும் என அவர் விவரித்தார். குறிப்பாக, 1981-இல் யாழ்ப்பாணப் பொது நூலகம் எரிக்கப்பட்டதை நினைவு கூர்ந்த அவர், அறிவு, நினைவுகள் மற்றும் வரலாற்றைப் பாதுகாப்பதில் இலக்கியம், புத்தகங்கள், எழுத்தாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்களின் பங்களிப்பை மதிக்கும் கலாசாரத்தை உருவாக்குவதன் அவசியத்தை இதுபோன்ற நிகழ்வுகள் உணர்த்துகின்றன என்றார். மேலும், நாட்டின் முக்கிய வரலாற்றுப் பகுதிகள் கல்வி முறையில் இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்திய பிரதமர், இதன் மூலமே எதிர்காலத் தலைமுறையினர் தங்களது நாடு எவ்வாறு வடிவமைக்கப்பட்டது என்ற வரலாற்றுப் பின்னணியை சரியாகப் புரிந்துகொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.