வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்திற்கு முந்தைய கலந்துரையாடலில் ஜனாதிபதி வலியுறுத்தல் இலங்கை போன்ற சிறிய சந்தை வாய்ப்பு உள்ள நாட்டில், பொருட்கள் மற்றும் சேவைகளின் கட்டுப்பாடு, வெறும் போட்டித்தன்மையின் அடிப்படையில் மாத்திரம் இடம்பெறும் என எதிர்பார்க்க முடியாது என்றும், அதற்காக அரசாங்கத்திடம் வலுவான விலைக்கட்டுப்பாட்டுப் பொறிமுறை இருக்க வேண்டும் என்றும், அதற்காக லங்கா சதொச மற்றும் கூட்டுறவு முறைமையை மேலும் வலுப்படுத்தி அதன் முக்கிய பங்காளியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (14) நடைபெற்ற வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு மூலம் 2026 ஆம் ஆண்டில் செயற்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு முந்தைய கலந்துரையாடலின் போதே, ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். அமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்கள், சுய-நிதியளிப்பு மூலம் செயற்படும் நிறுவனங்கள் மற்றும் திறைசேரியின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் செயற்படும் நிறுவனங்கள் ஆகிய 16 நிறுவனங்கள் ஊடாக, இந்நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களின் முன்னேற்றமும் இதன்போது விரிவாக மீளாய்வு செய்யப்பட்டது. விவசாயிகளின் நெல் மற்றும் தானியங்களை உலர்த்துவதற்காகச் சலுகை அடிப்படையில் இயந்திர உலர்த்திகளை வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறையில் உள்ளதுடன், தற்போது 45 இயந்திரங்களை இறக்குமதி செய்வதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும், விண்ணப்பித்த 65 நிறுவனங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 45 நிறுவனங்களுக்கு அந்த இயந்திரங்கள் வழங்கப்படும் என்றும் இங்கு குறிப்பிடப்பட்டது.