டிஜிட்டல், AI துறைகளில் இலங்கை - ஜப்பான் ஒத்துழைப்பை வலுப்படுத்த பேச்சுவார்த்தை
15 ஆகஸ்ட், 2026 அன்று 11:06 PM
டிஜிட்டல் மாற்றம் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறைகளில் இலங்கை - ஜப்பான் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன மற்றும் ஜேஐசிஏ (JICA) குழுவினர் கலந்துரையாடினர்.
டிஜிட்டல் மாற்றம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) துறைகளில் இலங்கை மற்றும் ஜப்பான் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்த விசேட கலந்துரையாடல் நேற்று (14) டிஜிட்டல் பொருளாதார அமைச்சில் நடைபெற்றது. இதில் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்ன மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமையின் (JICA) சிரேஷ்ட உப தலைவர் ஹாரா ஷொஹெய் தலைமையிலான பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இச்சந்திப்பில் இருதரப்பு ஒத்துழைப்பை இரண்டு முக்கிய துறைகளின் கீழ் மேம்படுத்துவது குறித்து விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக, டிஜிட்டல் தொலைக்காட்சித் திட்டத்தின் (Digital TV Project) பணிகளை விரைவுபடுத்துவது மற்றும் அதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைத் தீர்ப்பதன் அவசியம் குறித்து பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேலும், உள்நாட்டுத் தொழில்துறையை மேம்படுத்தவும், இறக்குமதிச் செலவைக் குறைக்கவும் டிஜிட்டல் சமிக்ஞைகளைப் பெறுவதற்குத் தேவையான செட்-டாப் பெட்டிகளை (Set-Top Boxes) உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இக்கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.