மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், நேற்று (13) பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில், மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ் ஏற்பாட்டில் இக்கூட்டம் நடந்தது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கந்தசாமி பிரபு, இராசமாணிக்கம் சாணக்கியன், ஞானமுத்து ஸ்ரீநேசன் ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் மாவட்டத்தின் மீன்பிடித் துறையை மேம்படுத்தவும் மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணவும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக, வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தை அபிவிருத்தி செய்தல், ஐஸ் தொழிற்சாலையை மீள இயக்குதல், இறங்குதுறைகளில் மின்விளக்குகள் மற்றும் எரிபொருள் நிலையங்களை அமைத்தல், மீனவர் வீதிகளை உருவாக்குதல் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துதல், குளங்களை மேம்படுத்தி மீன் வளர்த்தல், மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் மீன்பிடி உபகரணங்களின் தேவைகளை நிவர்த்தி செய்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டு, கடந்தகால திட்டங்களின் முன்னேற்றம் மீளாய்வு செய்யப்பட்டது.