இலந்தைக் குளம் புனரமைப்பு: கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்த அரசு முன்னுரிமை
15 ஆகஸ்ட், 2026 அன்று 11:01 PM
நாட்டின் கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்த அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருவதாக பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.

நாட்டின் கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், விவசாயத் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தவும் அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருவதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார். திருகோணமலை, குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இலந்தைக் குளத்தின் புனரமைப்புப் பணிகளை நேற்று (11) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
குச்சவெளி பிரதேச செயலாளர் U.L. சியாவுல் ஹக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இலந்தைக் குளத்தைச் செப்பனிடுவதற்காக அரசாங்கத்தினால் ரூ. 20.1 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இப்புனரமைப்புத் திட்டம் முழுமையடையும் போது, சுமார் 120 ஏக்கர் வயல் நிலங்கள் நேரடி நீர்ப்பாசன வசதியைப் பெறும். இதன் மூலம் அப்பகுதியின் விவசாய நடவடிக்கைகள் புத்துயிர் பெறுவதோடு, விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரமும் பொருளாதாரமும் கணிசமாக வலுப்பெறும் என்றும் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா மேலும் கூறினார்.