லியோனல் மெஸ்ஸியை குறிவைத்து தற்கொலை படை தாக்குதல் மிரட்டல்: கசிந்த காவல்துறை ஆவணத்தால் பரபரப்பு!
8 ஆகஸ்ட், 2026 அன்று 05:24 PM
2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் போது அர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்ஸியை தற்கொலைத் தாக்குதல் மூலம் கொல்ல சதி தீட்டப்பட்டதாக காவல்துறை ஆவணம் மூலம் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

உலகப் புகழ்பெற்ற அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியை குறிவைத்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக காவல்துறை ரகசிய ஆவணம் ஒன்று கசிந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 2026 பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளின் போது இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மெஸ்ஸி விளையாடிய போட்டிகளை குறிவைத்து அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன. குறிப்பாக, கடந்த ஜூலை 7ஆம் தேதி நடைபெற்ற அர்ஜென்டினா - எகிப்து அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின்போது, அட்லாண்டா மைதானத்திற்குள் புகுந்து மெஸ்ஸியை இலக்காகக் கொண்டு தற்கொலைத் தாக்குதல் நடத்தப்போவதாக சமூக வலைதளத்தில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
தனது உடம்பில் நான்கு வெடிகுண்டுகளைப் பொருத்திக் கொண்டு மைதானத்திற்குள் நுழைந்து மெஸ்ஸியைக் கொல்லப் போவதாக அந்த நபர் மிரட்டியதாக காவல் துறை ஆவணங்கள் வாயிலாகத் தெரியவந்துள்ளது. அதே நாளில் மைதானத்தின் குப்பைத் தொட்டிகளில் மூன்று வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் மற்றொரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. இதனையடுத்து, மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்களுடன் பாதுகாப்புப் படையினர் மைதானம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.